அவன் நினைத்தபோதெல்லாம் கழட்டிச்சென்றது தெரியும்
தாலியும் கழன்று கயிறு மட்டுமே இருப்பது தெரியாது
குடிக்க காசு இல்லையென்றால் அடிக்க தெரியும்
அடித்த சரக்கு இறங்கிய பின்னே அடித்ததும் தெரியாது
இவனின் குடல் எரிவது தெரியும்.ஆனால் அடுத்தவேளை
உணவுக்கான அடுப்பு அணைந்தது தெரியாது.
குடியின் குமட்டலில் வாந்தி வந்தது தெரியும்
குடியால் குடியின் சாந்தி போனது தெரியாது.
குடிக்காது உயர்ந்தவனின் உள்ளசேதி தெரியும்
பாதிதெரிய உடுத்தியிருக்கும் குடும்பத்தின் கதி தெரியாது.
குழந்தை பெற்றுகொள்ள தெரியும் .அவனை நல்விதமாய்
வளர்ப்பது அவளே சொன்னாலும் தெரியாது.
குடியில் குழந்தையை குபேரன் என்று சொல்லத் தெரியும்
குழந்தை கூலைத் தவிர எதும் உண்ணாதது தெரியாது.
அடுத்தவீட்டு குழந்தையின் பண ஆசைகள் தெரியும்
அவன்குழந்தையின் மன ஆசைகள் சொன்னாலும் தெரியாது.
குடியின் போதை குடலுக்கு நல்லதல்ல எனத் தெரியும்
குடியின் போதை குடிலுக்கு நல்லதல்ல எனத் தெரியாது
குடிக்ககூடாது என மனம் சொல்வது தெரியும்
விட்டுவிடும் வழி பணம் இல்லாத போதும் தெரியாது
குடியாலே இவன் இறக்கப்போவது தெரியும்.இவன் இறந்தபின்னே
பூப்பொட்டோடு சிரிப்பும் பறிக்கப் போவது பதட்டம் கூட தராது.
இப்படி இருந்தும்-இறந்தபின்னும் என்ன நடக்கும் எனத் தெரிந்தும்
தெரியாதது போலவே தான் தொடர்கிறது மாங்கல்யத்தின் மயக்கம்.
இது புரியாத புருஷன்களுக்காக புதுக்குடித்தனத்திலும்
தொடர்வதுஏனென்று தான் என் தாக்கம்.
No comments:
Post a Comment