எருமை மாடே!இதுதான் நீ
திட்டிய,பேசிய முதல் வார்த்தை.
நீ திட்டியதால் அனைவரும் சிரித்தனர். மறுநாள்- நீ
திட்டியபின்னே என்வீட்டு எருமைமாடும்-எமதர்மனும்
கூடஅழகாய் தெரிகிறது என்றதும், நீயே! சிரித்தாய்.
சிரிப்புடனே ஓசையின்றி வரும் தென்றலாய்
உன் நிழலோடு வடம் பிடித்து வந்தேன்.
செருப்பு பிஞ்சிடும் நாயே!
என்றாய். நீ சொல்லிய
மறுகணமே என்காலில் இருந்த செருப்பை பிய்த்து
கையில் தொங்கவிட்டபடி தொடர்ந்தேன். நீ என்னை
திரும்பி பார்த்த மறுகணமே மந்திரம் போல
வார்த்தையை உதிர்த்தேன்.செருப்பு
பிஞ்சிடும் என்றாய்,
இதோ! மறுகணமே பிய்ந்துவிட்டது.போதும்,
மேற்கொண்டு எதும் சாபம் விட்டுவிடாதே
என்றதும் சாந்தமாய் சிரித்துநடந்தாய்.
வரும் வழியெல்லாம் நாய் கண்டால் கல் எடுப்போர்
மத்தியிலே நானும்-நீயும் மட்டும் புண்ணகை பூண்டோம்.
மறுநாள் குளிக்காமலேயே உன்னைத் தொடர்ந்திட,
யாருமற்ற ஒரு இடத்தில் குளிக்கலையா
அழுக்குப்பையா? என்றாய்.இல்லை ,என்றதும் எட்டி நடந்தாய்
நக்கலோடு.
உன்நிழல் நேற்று என் உடலில் படர்ந்ததால் என்று
சற்று சத்தமாய் சொல்லிடஓடி வந்து வாயைப் பொத்தினாய்.
சந்தோசத்தில் எகிறி குதித்திட எகத்தாளத்தோடு சொல்லிப் போனாய்.நாளைக்குப்
பல்லும் தேய்க்காமல் வந்திடாதே
வாத்துமடையா!! என்று.
இந்த
வார்த்தை உன்னுள் என்னை
உறுதிப்படுத்திட உதயவனுக்குமுன்னே உதித்து விடச்செய்தது
எனது விழிகளை.விழிகளின் எரிச்சலையும் பொருட்டின்றி
உன்கூர் விழிகள் நோக்கி அம்பாய் என் அன்பினை எய்தினேன்.
கொஞ்சம் கோபம்-கொஞ்சம் நாணம் இரண்டும் சேர்ந்து
சிவந்தமுகத்தோடு சொன்னாய்.
'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்னக்
குரங்காட்டம்',
இது என்ன பதிலா? இல்லை, இதில் பதில் உள்ளதா,
என புரியாமல் அந்த நாள் முழுதும்,அழகி நீ இருக்கும்
இடம் விட்டு குரங்குகள் நிறைந்த பூங்காவில்
வாழைப்பழத்தோடும்-இஞ்சியோடும் இருந்திருந்தேன்.
அந்திவந்தும், மந்தி பல வந்தும் பதில் இன்றி பரிதாபமாய்
வீடு வந்தேன். பதிலுக்காக,பார்வையாலேயே கேட்டேன்
பரிதாபமாய் மறுநாள்.
நான், நாள் முழுதும் தேடியும் இஞ்சி தின்ன குரங்கை
பார்க்கவில்லையே நீ எங்கே கண்டாய்? என்றதும்,
பதில் இன்றி பலமாய் சிரித்தாய். இதற்கு ஏன் நாள்
முழுதும் பூங்காவில் காத்துக் கிடந்தாய்.
நாழிகை நொடிபோதுமே! நீ கண்ணாடி முன்னே
நின்றிருந்தால் என்றாய். கோபம் பொங்கிட நான்
பார்க்க-பயத்தில் மிரண்டு எட்டி நடை வைத்தாய்,
எட்டிச் சென்ற உன்னை எட்டிக் கைப்பிடித்திட,
கை உதறி போடா பொறுக்கி!
என்றாய்.
இந்த வார்த்தையை நீ சொல்லி புன்முறுவிட- புரியாமல்
தவித்த நான் வீடு வந்துதான் உணர்ந்தேன்.நீ
உதிர்த்த புன்னகையை பொறுக்கி வரவில்லை என்பதை.
எத்தனை முறை ஒத்திகை பார்த்திருக்கிறேன் நீ
உதிர்த்த அந்த புன்னகையை என்னுடைய
படுக்கையறையில்.
வாய் வார்த்தையாய் திட்டு வாங்கிய நான் உன்னிடம்
செல்லமாய்அடிவாங்கிடத் தொடங்கினேன்.
நீ திட்டுவதற்காக ஏங்கி இருந்த கணங்கள் போல
காத்திருந்தேன், நீ செல்லமாக மார்பில் குத்தி
தலைசாய்ந்திடும் சந்தர்ப்பங்களுக்காக.
'காதலுக்கு கண்ணில்லை' என்பார்கள், நமக்குத்தானே
தெரியும், நாற்புறமும் படபடக்க உருண்டு சுழன்ற
நம் விழிகளின் வேகம் ஒலியின் வேகத்தை விட
பன்மடங்கு அதிகம் என்பது.
எத்தனையோ இரவு நிம்மதியோடு உறங்கியிருக்கிறோம்,
யார் கண்ணிலும் சிக்கவில்லை என நினைத்து.
நீ திட்டியதாலே எருமைமாடும்-எமனும் கூட பிடித்துப்
போய்விட்டதால் ஆசிர்வாதம் கேட்டு மண்டியிட்டதுமே
உன்மாமனாருக்கும் பிடித்துவிடும் என நினைத்து
என் அப்பாவிடம் அழைத்துவந்தேன்.
பிடித்துதான் போனது என் அப்பாவுக்கும்.அதனால்
மறுமாதமே கெட்டிமேளம்.உன்னோடு அல்ல,
ஆமாம். அப்பாவுக்கு பிடித்தது உன்னை அல்ல-
அவருக்கு பிடித்தது பைத்தியம்.
உன்னை பிடிக்காத அப்பாவால், எனக்குப்
பிடிக்காதவளோடு பிடிவாதத்திருமனம்.
திட்டு வாங்குவதற்கே திவிட்டாத இன்பமாய்
காத்திருந்து திட்டும்-அடியும் வாங்கிய, நான் அன்று
ஏசுவாய் இருந்தேன் நீ ஏசிய பொழுதிலெல்லாம்.
இதோ இன்றுநீ வாழ்த்திய வாக்கியத்தில்
வாழாவெட்டியாய் வாழ்கிறேனடி.
1 comment:
chanceless kaviyan....
superb lines....
vallthukkal...
Post a Comment